×

பெண் இன்ஸ்பெக்டர் தாக்கியதாக வாலிபர் புகார்: தாக்கவில்லை என இன்ஸ்பெக்டர் பேட்டி

 

கடலூர், அக். 8: கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் காயத்ரி(25). இவரது கணவர் நவீன்(31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக காயத்ரி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நவீன் மீது புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் நவீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக நவீன் நேற்று மாலை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவர் காவல் நிலையத்திற்கு வெளியே மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து நவீனிடம் கேட்டபோது, குடும்பப் பிரச்னை காரணமாக எனது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் என்னை விசாரணைக்காக அழைத்தனர். அங்கு சென்றபோது, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் என்னை குனிய வைத்து முதுகில் தாக்கினார். இதில் நான் மயங்கி விழுந்து விட்டேன், என்று கூறினார். இதையடுத்து நவீனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியிடம் கேட்டபோது, பார்வதிபுரத்தை சேர்ந்த நவீன் என்பவரின் மனைவி காயத்ரி கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். அவரை விசாரணைக்காக அழைத்திருந்தோம். ஆனால் அவர் காவல் நிலையத்திற்கு உள்ளே கூட வரவில்லை. யாருடைய தூண்டுதலின் பேரிலோ காவல் நிலையத்தின் வெளியே மயங்கியது போல் நடித்துள்ளார். நவீன் ஏற்கனவே காயத்ரியை தாக்கியதில் அவரது வலது காதில் ரத்தம் வந்துள்ளது. இதனால் அவரை கைது செய்து விடுவோம் என்ற பயத்தில் அவர் இவ்வாறு செய்துள்ளார். நான் அவரை தாக்கவில்லை, என்றார்.

The post பெண் இன்ஸ்பெக்டர் தாக்கியதாக வாலிபர் புகார்: தாக்கவில்லை என இன்ஸ்பெக்டர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Gayatri ,Vadalur Parvathipuram, Cuddalore district ,Naveen ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்